லசந்த கொலைச் சந்தேகநபர்களை விடுவிப்பது ஓய்வு பெற்ற இராணுவ குழுவின் அழுத்தத்தினாலா?
நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமர அவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸாரை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் ஜனாதிபதியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
“நாட்டில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்களில் சந்தேகநபர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களை விடுதலை செய்ய தற்போதைய ஜனாதிபதிக்கு, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்த
ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரர்களின் மன்றம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சட்டமா அதிபர் திணைக்களம் நடைமுறைப்படுத்துகிறதா என்ற சந்தேகம் தற்போது சமூகத்தில் எழுந்துள்ளமை மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.”
கறுப்பு ஜனவரியில் இடம்பெற்ற கொடூரமான திட்டமிட்ட குற்றமான ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூவரை விடுதலை செய்வதற்கான சட்டமா அதிபரின் பரிந்துரைகளை கடுமையாக எதிர்ப்பதாக, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கின்மை ஆட்சி செய்த சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு பெரும்பான்மை மக்களால் அதிகாரம் பெற்ற அரசாங்கத்தின் கீழும் அக்கிரமம் தொடருமாயின் அது வருந்தத்தக்கது என அந்த சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத் மற்றும் செயலாளர் ரங்க பண்டாரநாயக்க ஆகியோரின் கையொப்பத்துடன் இன்றைய தினம் (பெப்ரவரி 5) வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உதலாகம, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி திஸ்ஸசிறி சுகதபால ஆகியோரை லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கையின்றி விடுதலை செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அந்த தீர்மானத்தை ஜனவரி 27ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளருக்கு அறிவித்துள்ள சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (கனிஷ்ட), இந்தக் கடிதம் கிடைத்த 14 நாட்களுக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தன்னிடம் தெரிவிக்குமாறும் அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலைமையை நடைமுறைப்படுத்தும் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமாயின், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி – நீதியமைச்சர் – ஊடக அமைச்சர் உள்ளிட்ட முழு அரசாங்கத்திற்கும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் தனது கடும் வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
2020 நவம்பரில் மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளை கொன்றதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி மீளப் பெறுவதற்கு கடந்த டிசம்பரில் சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதானவை ஆச்சரியப்படுத்திற்கு உள்ளாக்கியது.
தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தின் தலைவரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனக்கு கீழ் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தியிள் ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தின் முன்னணி உறுப்பினராக இருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்கள சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
லசந்த கொலை வழக்கில் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ”குற்றவாளிகளை காக்கும் சட்டமா அதிபர் வீடு செல்ல வேண்டும், லசந்த வழக்கில் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி என்பதை வெளிப்படுத்த வேண்டும்” எனக் கோரி, நாளைய தினம் (பெப்ரவரி 6) வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு இளம் ஊடகவியலாளர் சங்கம் தயாராகியுள்ளது.