ரயிலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மலையக பிரதான ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளின் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடுமையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பில் கூறுகையில்,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி ரயிலின் கதவுகளுக்கு வெளியே சாய்ந்து, கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, ஆபத்துகளை மறந்தே செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கின்றார்கள்.
சமீபத்திய வழக்கில், ஓஹியா மற்றும் இடல்கஷின்னா அருகே செல்ஃபி எடுக்க முயன்ற ஈரானிய பெண் ஒரு சுரங்கப்பாதையில் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
அதேபோன்று நேற்று முன்தினம் வெள்ளவத்தை பகுதியிலும் ஒரு வெளிநாட்டு பிரஜை ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
ஏனைய சம்பவங்களில் சுற்றுலா பயணி ஒருவர் கால் பலகையில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார், மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.