
வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் ஏழாம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
இதன்படி, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் எட்டாம் திகதி ஆரம்பமானது.
14 ஆம் திகதிவரை விவாதம் நடைபெற்றது. 14 ஆம் திகதி மாலை இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததுடன் எட்டு பேர் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்திருந்தனர்.
அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமானது.
இதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
