ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“14 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீல உடையை அணிந்தேன். இந்த விளையாட்டு என்னை இப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவே இல்லை.
இது என்னை சோதித்து, என்னை ஒரு நல்ல வீரனாக உருவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு.
அமைதியாக உழைப்பது, நீண்ட நேரம் மைதானத்தில் இருப்பது, யாரும் கவனிக்காத சிறு தருணங்கள் முதல்கொண்டு இவை எல்லாம் மறக்கவே முடியாது.
இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவது கடிடமாக இருந்தாலும், இது சரியான முடிவு என்று தோன்றுகிறது. நான் இதற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்தது.
விளையாட்டுக்கு, என்னுடன் விளையாடியவர்களுக்கு, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இந்திய அணி தனது இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள நிலையில், கோலியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி, மூன்று ஆண்டுகளின் பின்னர் அணியின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
அணியின் தலைவராக 68 போட்டிகளில் இந்தியாவை வழிநடித்தியுள்ள அவர் 40 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்திருந்ததுடன், 11 போட்டிகளை சமநிலைப்படுத்தியுள்ளார்.
17 போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. 58.82 வீத வெற்றியுடன், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறந்த தலைவராக செயற்பட்டுள்ளார்.
வேறு எந்த இந்திய அணி தலைவர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 46.85 சராசரியில் 9,230 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அடங்கும்.
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, சமீபத்திய ஆண்டுகளில் நிலைத்தன்மைக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார்.
அவர் இறுதியாக அஸ்திரேலியாவில் விளையாடி 2024-25 போர்டர் கவாஸ்கர் தொடரின் போது, ஐந்து போட்டிகளில் வெறும் 186 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.