
மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார்.
அவரை காண்பதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
லியோனல் மெஸ்ஸியின் வாகனம் சரியாக இன்று காலை 11.30 மணிக்கு மைதானத்திற்குள் நுழைந்தது. அவருடன் கால்பந்து வீரர்கள் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். மைதானத்தில் கூடியிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆரவாரத்தைக் கண்டு அந்த வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், லியோனல் மெஸ்ஸி மைதானத்திற்குள் நுழைந்த உடனேயே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 70 முதல் 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது.
அந்தக் கூட்டம் மெஸ்ஸியுடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் முயன்றது. இதன் விளைவாக, பார்வையாளர்களால் மெஸ்ஸியை கேலரிகளில் இருந்து பார்க்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில், கோபமடைந்த கால்பந்து ரசிகர்கள் ‘மெஸ்ஸியை காணவேண்டும்’ என்று முழக்கமிடத் தொடங்கினர். இதன் காரணமாக மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியை உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மைதானத்துக்கு வருவதற்கு முன்பே, காலை 11.52 மணியளவில் லியோனல் மெஸ்ஸி மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்ற விரக்தியில் கால்பந்து ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் அவர்கள் கேலரியில் இருந்த நாற்காலிகளை உடைத்து மைதானத்திற்குள் வீசத் தொடங்கினர். பாட்டில்களும் மைதானத்திற்குள் பறந்து விழுந்தன.
மக்கள் மைதானத்தின் கேலரியின் அருகே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பெருமளவில் மைதானத்துக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கானோர் மைதானத்துக்குள் புகுந்து, தற்காலிக மேடைகளை தலைகீழாகப் புரட்டினர். மேலும், மைதானத்தில் இருந்த சில பொருட்களுக்குத் தீயும் வைத்தனர்.
காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மைதானத்துக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி நிர்வாகத்துக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எதிராக முழக்கமிட்டனர். அங்கு அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர்.
இதுகுறித்துப் பேசிய ரசிகர்கள், “தலைவர்களும் நடிகர்களும் மட்டுமே மெஸ்ஸியை சூழ்ந்திருந்தனர். அப்படியென்றால் எங்களை ஏன் அழைத்தார்கள். நாங்கள் 12 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியுள்ளோம், ஆனால் எங்களால் அவரது முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. இது முற்றிலும் ஒரு பயங்கரமான நிகழ்வு. அவர் வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வந்துவிட்டு சென்றுவிட்டார். இவ்வளவு பணமும், உணர்வுகளும், நேரமும் வீணாகிவிட்டது. எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை.” என்று தெரிவித்தனர்.
லியோனல் மெஸ்ஸி இன்று (டிசம்பர் 13) அதிகாலையில் கொல்கத்தா வந்தடைந்தார். மெஸ்ஸியை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லேக் டவுனில் உள்ள ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் அருகே மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தாவுக்கான இரண்டாவது வருகையாகும். அவர் ஏற்கெனவே 14 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்.
மம்தா பானர்ஜி மன்னிப்பு: கொல்கத்தா மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் இன்று ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன். தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்று அவர் கூறினார்
