
3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.
இதேவேளை இன்றைய தினமும் (22) நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டனர்.
சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காண முடிந்தது.
இந்நிலையில் போதுமான கையிருப்பை பேணுவதற்காக புதிய கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் அதிகளவிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகிக்கப்படும் சரியான திகதி குறித்து லிட்ரோ நிறுவனம் தமக்கு இதுவரை அறிவிக்கவில்லை என வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
