சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்கள் திடீர் பரிசோதனை

சிவனொளிபாதமலைக்கு செல்லும் வாகனங்கள் திடீர் பரிசோதனை

சிவனொளிபாதமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று (03) நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகளால் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வாகனங்களில் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை அகற்றவும், ஹேண்ட் பிரேக், சிக்னல் விளக்குகள், முகப்பு விளக்குகள் உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில், குறைபாடுகளை சரிசெய்ய சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த காலப்பகுதியில் குறித்த வாகனங்களை இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் வாகனத்தின் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் வாகனப் பிரிவு அதிகாரிகளிடம் சமர்ப்பித்து நல்லதண்ணி பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த அறிக்கை கிடைக்கும் வரை வாகனங்களின் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நல்லதண்ணி பொலிஸ் பொறுப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This