
தொழில்முனைவோரைப் பாதுகாக்க வங்கிகளின் மிகை லாபத்தைப் பயன்படுத்துக: சஜித் கோரிக்கை
இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் சுமார் 11 இலட்சம் தொழில்முனைவோர் காணப்படுவதுடன், அவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்களிப்பு 52% ஆக உள்ள போதிலும், கடந்த கால நெருக்கடிகளால் இத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, சுமார் 2,63,000 தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளதுடன், 1,50,000 க்கும் அதிகமானவை வங்குரோத்தடைந்துள்ளன.
நாட்டின் கடனைச் செலுத்த 2028 வரை கால அவகாசம் கிடைத்துள்ள போதிலும், இந்தத் தொழில்முனைவோரின் கடன்கள் முறையாக மறுசீரமைக்கப்படவில்லை.
பராட்டே (Parate) சட்ட அமுலாக்கத்தில் தற்காலிக சலுகை வழங்கப்பட்டாலும், இடைப்பட்ட காலத்தில் இவர்களின் கடன் சுமை குறையவில்லை என அவர் கவலை தெரிவித்தார்.
நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகை இலாபங்களை ஈட்டியுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இலாபத்தின் ஒரு பகுதியை, கடன் பொறியில் சிக்கியுள்ள நுண் மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 100 மில்லியன் டொலர் நிதி உதவிக்காக நன்றி தெரிவித்த அவர், உள்நாட்டு வங்கிகளும் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
