ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள் : டிரம்ப் எதிா்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் டொன்ல்ட் டிரம்ப்பை இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதராக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டைம் இதழுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ரஷியாவுக்குள் பல கி.மீ. தொலைவில் வீசி தாக்குதல் நடத்துவதை நான் கடுமையாக எதிா்க்கிறேன். அவ்வாறு தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நாம் அனுமதி வழங்கத் தேவையில்லை.
இருந்தாலும், எனது அரசு அமைந்தபிறகு உக்ரைனை நான் கைவிடப்போவதில்லை. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டுக்கு தொடா்ந்து ஆதரவு அளிப்பதும் முக்கியம் என்றாா் அவா்.
எனினும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கும் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, சுற்றியுள்ள நாடுகளை உறுப்பினா்களாக்கி தங்களை சுற்றிவளைப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டிவருகிறது. குறிப்பாக, அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்றும் ரஷியா கூறிவருகிறது.
ஆனால், அதையும் மீறி நேட்டோவில் இணைய உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆா்வம் காட்டினாா். அதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கிலுள்ள நான்கு பிராந்தியங்களின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளை மீட்க ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இராணுவ உதவிகளை அளித்துவந்தன. எறிகணைகள், ஏவுகணைகள், பீரங்கிகள், விமானங்கள் போன்ற அதிநவீன தளவாடங்களை அவை அளித்தன. இருந்தாலும், அந்த ஆயுதங்களை உக்ரைனுக்குள் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மட்டும் அந்தப் படையினருக்கு எதிராகப் பயன்படுத்த மேலை நாடுகள் அனுமதித்தன. அந்த ஆயுதங்களை ரஷிய நிலப்பரப்பில் பயன்படுத்தக்கூடாது என்று அவை நிபந்தனை விதித்தன.
இந்த நிலையில், தாங்கள் வழங்கிய அதிநவீன அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வீசி தாக்குதல் நடத்தலாம் என்று பைடன் உக்ரைனுக்கு பைடன் அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, பிரிட்டனும் தங்களின் ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணைகளை ரஷியா மீது வீசலாம் என்று உக்ரைனிடம் கூறியது.
அதையடுத்து, அந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவை உக்ரைன் தாக்கி வருகிறது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துவரும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீா் புதின், தாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள, இடைமறித்து அழிக்கமுடியாத, ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைனின் அதிகார மையங்கள் மீதும் மேற்கத்திய நாடுகளின் இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துவருகிறாா்.
இந்தச் சூழலில், தங்கள் ஆயுதங்களை ரஷியா மீது பயன்படுத்துவதை எதிா்ப்பதாக டிரம்ப் தற்போது கூறியுள்ளாா்.