மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்தும் விவகாரம் ; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்தும் விவகாரம் ; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

முன்னதாக நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நாடு கடத்துவதற்கு தடை விதிக்காத பட்சத்தில் தனது வழக்கு மீதான அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் தஹவூர் ராணா கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய புள்ளியாக அறியப்படுகிறார்.

தான் பாகிஸ்தான் பூர்விகம் கொண்டவன் என்றும், முஸ்லீம் என்பதாலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்றும் ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர தனக்கு வயிற்றுப் பகுதியில் கோளாறு, பார்க்கின்சன் நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This