
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம்
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இரண்டு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அது குறித்து மூன்றாம் நாடு ஒன்றிற்கு அறிவிப்பதில்லை. அவ்வாறு அறிவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
கடற்படைக்கு எவ்வாறு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பகுதியில் சடலங்கள் மற்றும் சில உயிர்காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மையத்திற்கு செய்தி கிடைத்தது.
அங்கு 32 பேர் உயிருடன் இருந்தனர், மேலும் சிலர் காணாமல் போயிருந்தனர். சில சடலங்களை நாம் மீட்டிருந்தோம். செய்தி துல்லியமாக எங்கிருந்து வந்தது என்பதை என்னால் சரியாகக் கூற முடியாது” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.
