ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது.
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் ஏற்கனவே கூறியது உங்களுக்கும் தெரியும். இது ஒரு செயல்முறை. திடீரென நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும். அவர்கள் (இந்தியா) ரஷ்யாவிடம் இருந்து 40% அளவுக்கு எண்ணெய் வாங்கியவர்கள்.
இந்தியாவின் செயல்பாடு மிகச் சிறப்பானது. பிரதமர் மோடியுடன் நேற்று நான் பேசினேன். உண்மையில் அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 16-ம் திகதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் ட்ரம்ப்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்பின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக அதே 16ம் திகதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
நிலையான எண்ணெய் விலை, பாதுகாப்பான விநியோகம் ஆகியவையே இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது. தற்போதைய நிர்வாகம், இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி இருக்கிறது. இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.