மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் அவசியம்

அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம்,வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்த பிரச்சினைகளுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
நில்வலா கங்கையின் உப்பள வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இதற்கு முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
அந்த சந்திப்பில் நில்வலா கங்கை உப்பளத்தின் காரணமாக மாத்தறை பகுதியில் ஏற்படக்கூடிய வௌ்ள நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் நீண்டகால மற்றும் குறுகிய காலங்களில் எடுக்கக்கூடிய பல நடவடிக்கைகள் தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான நவடிக்கைகளை எடுக்கவும் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் அது குறித்தும் ஆராயப்பட்டது.
அதன்படி நீண்டகால தீர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் திட்டமிடல் நிறுவனத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அதன்படி அணைக்கட்டு அமைக்கப்பட்டதன் பின்னர் எழுந்துள்ள நிலைமையை கருத்தில் கொண்டு தீர்வுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
குறுகிய கால தீர்வுகளாக அவசர வெள்ள நிலமை ஏற்படும் பட்சத்தில் வெள்ளம் விரைவாக வழிந்தோடக்கூடிய வகையில் ஆறுகளில் காணப்படும் முறிந்து விழுந்த மரங்கள் உள்ளிட்ட தடைகளை அகற்றுதல் மற்றும் கால்வாய்களை சுத்தப்படுத்தல், இதற்கு முன்னதாக நீர் வளங்கள் சபையினால் மணல் மூட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அணைக்கட்டை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நில்வலா கங்கையின் முகத்துவாரத்தை அகலப்படுத்தவும், வௌ்ள நிலமையின் போது மேலதிக நீரை தற்காலிகமாக நிறுத்தி வைக்ககூடியவாறு கால்வாய்களை ஆழமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நீரை விரைந்து அகற்றுவதற்காக இடப்பட்டிருக்கும் நீர் மோட்டர்களின் திறனை அதிகரிப்பதற்கான யோசனைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைவாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்னைடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மாத்தறை நில்வலா கங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் அணைக்கட்டை அண்டிய பகுதிகளில் வௌ்ளம் அதிகரிக்க காரணமாகியுள்ளதுடன், உவர் நீர் வயல்கள் வரையில் வருவதன் காரணமாக விளைச்சல்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற விடயங்கள் பிரதேசவாசிகள் மற்றும் விவசாயிகளாலும் கூறப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் விவசாய, கால்நடை வளங்கள்,காணி, நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.