இலங்கை, உக்ரைன் விவகாரங்களில் ஐ.நா இரட்டை நிலைப்பாடு – ரணில் கவலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் வெளிச்சத்தில் ஐ.நா எடுத்த மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சூழவுள்ள முக்கிய பிரச்சினைகளில் மௌனம் காத்து வருவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தவறியதும் இதில் அடங்கும். இலங்கை சரியான நேரத்தில் தேர்தலை நடத்தியதாக ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்துள்ளார்.
இலங்கை வித்தியாசமாக நடத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் இருமுனை அணுகுமுறையையும் விமர்சித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய அரசியல் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், சர்வதேச சமூகம் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர முற்படும் நேரத்தில் இந்த கருத்துக்களை ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.