சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச
சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது.
சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையிலிருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு ‘ கௌரவ சபாநாயகர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலேக்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பிட்டி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கையொப்பமிட்டனர்.