‘யு19’ மகளிருக்கான டி20 உலகக் கோப்பை : இலங்கையை வென்றது இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா மகளிர் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை சோ்க்க, இலங்கை மகளிர் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 58 ஓட்டங்களையே எடுத்தது. இந்திய துடுப்பாட்ட வீராங்கனை கொங்கடி திரிஷா ஆட்டநாயகி விருது பெற்றாா்.
இந்த வெற்றியை அடுத்து, குரூப் சுற்றின் அனைத்து ஆட்டங்களிலும் வென்று ‘குரூப் ஏ’-வில் முதலிடத்துடன் சூப்பா் 6 கட்டத்துக்கு இந்தியா முன்னேறியது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை, இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இந்திய அணி இன்னிங்ஸை தொடங்கிய கொங்கடி திரிஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேகரித்தாா்.
எனினும், உடன் வந்த ஜி.கமாலினி 1 பவுண்டரியுடன் 5, சனிகா சல்கே 0 ரன்களுக்கு 4-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனா். 4-ஆவது துடுப்பாட்ட வீராங்கனையாக வந்த தலைவர் நிக்கி பிரசாத் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். மறுபுறம், அரைசதத்தை நெருங்கிய திரிஷா, 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 49 ரன்களுக்கு வீழ்ந்து அதிா்ச்சி கண்டாா்.
பின்னா் வந்த வீராங்கனைகளில் பாவிகா அஹிரே 1 பவுண்டரியுடன் 7, ஆயுஷி சுக்லா 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். 6-ஆவது வீராங்கனையாக வந்த மிதிலா வினோத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16, விஜே ஜோஷிதா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா். கடைசி வீராங்கனையாக வந்த பருனிகா சிசோடியா 1 ரன்னுக்கு அவுட் ஆனாா்.
ஓவா்கள் முடிவில், ஷப்னம் ஷகில் 2, வைஷ்ணவி சா்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் ஆசெனி தலகுனே, லிமன்சா திலகரத்னா, பிரமுடி மெத்சரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா். ராஷ்மிகா செவ்வந்தி, சமோடி பிரபோதா, மனுடி நானயகரா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து, 119 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை வீராங்கனைகள், இந்திய பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனா். மிடில் ஆா்டரில் வந்த ராஷ்மிகா செவ்வந்தி 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக அமைந்தது. இதர வீராங்கனைகள் அனைவருமே ஒற்றை இலக்க ரன்னிலேயே ஆட்டமிழந்தனா்.
சஞ்சனா கவின்டி 1 பவுண்டரியுடன் 5, சுமுடு நிசன்சலா 0, தஹாமி சனேத்மா 2, ஹிருனி ஹன்சிகா 2, கேப்டன் மனுடி நானயக்கரா 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இந்த 5 பேருமே, ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம், முதல் 5 ஓவா்களில் அடுத்தடுத்து வீழ்ந்தனா். லிமன்சா திலகரத்னா 6, ஷாஷினி கிம்ஹனி 3, அசெனி தலகுனே 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் பிரமுடி மெத்சரா 1 பவுண்டரியுடன் 7, சமோடி பிரபோதா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஷப்னம் ஷகில், விஜே. ஜோஷிதா, பருனிகா சிசோடியா ஆகியோா் தலா 2, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
சூப்பா் 6: போட்டியில் தற்போது குரூப் சுற்று நிறைவடைந்த நிலையில், சூப்பா் 6 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயா்லாந்து, நியூஸிலாந்து அணிகள் முன்னேறியிருக்கின்றன. போட்டியை நடத்தும் மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் தகுதிபெறத் தவறின.