கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரு இலங்கையர்கள் கைது

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, ஜிலான், பெர்லெப்னிகே பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தடுக்க எண்ணியதைக் கவனித்த வாகன ஓட்டுநர் ஒருவர், வேகத்தை அதிகரித்து தப்பி ஓட முயன்றார். எனினும், சிறிது தொலைவில், அவர் வாகனத்தை கைவிட்டு கால்நடையாக தப்பிச் சென்றார்.
எனினும், ஆவணங்கள் இல்லாத இரண்டு ஆண்கள் வாகனத்தின் அருகே இருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களுடனான விசாரணையின் போது, அவர்கள் தாங்கள் இலங்கையர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த வாகனத்துடன் செர்பியாவிலிருந்து கொசோவோ குடியரசில் நுழைந்ததாகவும் கூறினர்,” என்று கொசோவோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அது செர்பியாவைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து சட்டதுறையை சேர்ந்தவர்களுடன் கலந்தாலோசித்ததில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து குடியேற்றப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது, அவர்கள் கொசோவோ குடியரசில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கான முடிவு வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.