சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்

சிறப்புரிமை இரத்து சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரு மனுக்கள்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெயாங்கொடையைச் சேர்ந்த ஹரிந்திரரத்ன பனகல மற்றும் பன்னிபிட்டியவைச் சேர்ந்த பிரேமசிறி விஜேசேகர ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அதிகார பகிர்வு, இறையாண்மை மற்றும் மக்களின் இறைமையை மீறும் வகையில் உள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் விதிகள், ஒட்டுமொத்தமாக, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 1, 3, 4 மற்றும் 12(1) பிரிவுகளை மீறுவதாகவும் உள்ளதென மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, சட்டமூலத்தின் தொடர்புடைய விதிகளை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும், சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவும் முன்னதாக குறித்த சட்டமூலத்தை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share This