துருக்கி ஹோட்டல் தீ விபத்து…உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு
துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள போலு மாகாணத்தில் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ஹோட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இத் தீ விபத்தில் சுமார் 66 பேர் உயிரிழந்ததோடு 51 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் இதுவரையில் 45 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இவ் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.