உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு

” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். குறித்த ஆணைக்குழுவின் பணியும் விரைவில் ஆரம்பமாகும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” 2009 இல் போர் முடிவடைந்து ஒரு வாரம் சென்ற பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவை அமைக்குமாறு ஜே.வி.பியினராகிய நாம் பரிந்துரை முன்வைத்தோம். இதற்கமைய ஆணைக்குழு அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கி இருந்தால் ஜெனிவா தீர்மானம் என ஒன்று வந்திருக்காது. இன்று அது பற்றி கதைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.
எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆணைக்குழுவின் பணியை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும்.அதேபோல சுயாதீன வழக்கறிஞர் அலுவலகமொன்றும் ஸ்தாபிக்கப்படும்.
போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினர் மற்றும் வேறு எந்தவொரு இன குழுமத்தையும் இலக்கு வைத்து நாம் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம். நல்லிணக்கம், மனித உரிமை பாதுகாப்பு, மீள்நிகழாமை போன்ற சூழ்நிலையை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.
அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும். சர்வதேச நியமனங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தக்கு எதிரான புதிய சட்டம் வரும். நிகழ்நிலை காப்பு சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார்.