டிரம்பின் வரிக் கொள்கை – இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கை இலங்கை சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் இலங்கையின் ஆடைகள், ரப்பர், தேங்காய் மற்றும் பிளாஸ்டிக் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“டிரம்பின் வர்த்தகக் கொள்கையின் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஏற்கனவே எடுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதர் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இலங்கை அமெரிக்காவுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும் அந்த நாட்டோடு வெற்றிகரமான ஈடுபாட்டையும் கொண்டிருக்கிறோம். இந்த விடயத்தில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.” என்றும் அவர் கூறினார்.
டிரம்பின் வர்த்தகக் கொள்கையின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த இவ்வாறு கூறினார்.