பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
![பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் – ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/371b1ff0-e26a-11ef-a319-fb4e7360c4ec.jpg)
காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிரம்ப் கூறியுள்ளதாவது: அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் சனிக்கிழமை 12 மணி மணிக்குள் திரும்பி வராவிட்டால், அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இதுவே சரியான நேரம் என நான் கருதுவேன். அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஒன்று, இரண்டு, மூன்று… என விடுவிக்காமல், மொத்தமாக விடுவிக்கப்பட வேண்டும்.
அனைவரையும் திரும்ப பெற விரும்புகிறோம். நான் எனக்காக பேசுகிறேன். இதனை இஸ்ரேல் மீற முடியும். ஆனால், என்னை பொறுத்தவரை சனிக்கிழமை 12 மணிக்குள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் நரகத்தறி்கு செல்வார்கள். இந்த காலக்கெடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். ஹமாசுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்பதற்கு பதிலளிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.