அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த டிரம்ப் உத்தரவு

அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த டிரம்ப் உத்தரவு

பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக, ஜனவரி 20இல் டிரம்ப் பொறுப்பேற்றார். அவரது அரசில், ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தின்தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையில் பணித் திறன் துறை அமைக்கப்பட்டுள்ளன. இந்த துறை, அரசின் செலவினத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்கள், திடீரென, கடந்த வாரம் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். பணியிலிருந்து நிறுத்தப்பட்டதாக பலருக்கும், இ – மெயில்கள் அனுப்பப்பட்டன. அவற்றை படிக்காமல், அலுவலகம் வந்தவர்கள், உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

பணியிலிருந்து நிறுத்தப்பட்டோரில், 30 சதவீதத்திற்கும் அதிகமானோர், டெக்சாஸ் மாகாணத்தின் அமரில்லோ நகருக்கு அருகில் உள்ள, ‘பான்டெக்ஸ் பிளான்ட்’ என்ற பெடரல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். பணியிலிருந்து திடீரென நிறுத்தப்பட்ட பலர், அணு ஆயுதத் திட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள். அவர்கள் திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் அமெரிக்காவின் செயல்திட்டங்கள் குறித்த அச்சமும் எழுந்துள்ளது. ஜனாதிபதியின் கண்மூடித்தனமான செயல்பாட்டால், உள்நாட்டில் பல விதமான குழப்பங்கள் ஏற்படும் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தன் முடிவை நிறுத்தி வைத்துள்ள டிரம்ப், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவரா என்பது தெரியவில்லை. அவர்களின் கருத்தை கேட்க முடியவில்லை என, அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Share This