காசா’வை விழுங்கத் துடிக்கும் டிரம்ப்

ஹமாஸ் – இஸ்ரேல் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் 56,000 பேர் உயிரிழந்த காசா நகரம் இடிபாடுகளாக காட்சி அளிக்கிறது.
இலட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தத்துக்கு பின் தங்கள் இடங்களுக்கு திரும்பியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் 20 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இடிபாடுகளை அகற்றும் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தற்போதைய தேவை. ஆனால் அவை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் காசா மக்களை நிரந்தமராக வெளியேற்றி அங்கு ரிசார்ட் சொகுசு நகரத்தை உருவாக்கும் கனவு திட்டத்தை அறிவித்தார். இதனை இஸ்ரேல் தொலைநோக்கு பார்வை என வர்ணித்தது.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காசா மக்களைக் குடியேற்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளன.
இதற்காக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
காசா மக்களை அண்டை நாடான ஜோர்டான் மற்றும் எகிப்தில் குடியேற்றுவது குறித்துப் டிரம்ப் பேசியிருந்தார். காசாவில் உள்ள 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும் என்ற அவரது திட்டத்தை அரபு நாடுகளும் பாலஸ்தீனியர்களும் முற்றிலுமாக நிராகரித்தனர். இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களை ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அசோசியேட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த இராஜதந்திர முயற்சி ரகசியமாக செய்யப்படுகிறது. சோமாலியா மற்றும் சோமாலிலாந்துடனான தொடர்புகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், பேச்சுவார்த்தை எந்த மட்டத்தில் நடந்தது, அதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. தகவல்களின்படி, சூடான் அமெரிக்க முன்மொழிவை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சோமாலியாவும் சோமாலிலாந்தும் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளன.