மெக்ஸிகோ தக்காளிக்கு வரிவிதித்த ட்ரம்ப்

மெக்ஸிகோ தக்காளிக்கு வரிவிதித்த ட்ரம்ப்

மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் தக்காளிக்கு 17 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கையின் மூலம், தள்ளுபடி விலை ஏற்றுமதி வரிகளிலிருந்து மெக்ஸிகோவின் தக்காளி உற்பத்தியை பாதுகாத்து வந்த மூன்று தசாப்தகால பழைய ஒப்பந்தம் அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் கடந்த திங்களன்று அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியானது. இது, மெக்ஸிகோவுக்கு அமெரிக்காவுடன் ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டிய அவசரநிலையை உருவாக்கியது. இல்லையெனில், மெக்ஸிகோவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத பொது வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

“மெக்ஸிகோ எங்கள் மிகப்பெரிய நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ளது, ஆனால் மிக நீண்ட காலமாக தக்காளி போன்ற விளைபொருட்களின் விலையைக் குறைக்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் எங்கள் விவசாயிகள் நசுக்கப்பட்டுள்ளனர்” என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புளோரிடா தக்காளி பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவுக்கு அவசியமான தக்காளியில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை மெக்ஸிகோ வழங்குகிறது. இந்நிலையில், மெக்ஸிகோவின் பொருளாதாரம் மற்றும் விவசாய அமைச்சுக்கள், ஒரு கூட்டு அறிக்கையில், இந்த நடவடிக்கையை “அநியாயமானது” என்றும் “மெக்ஸிகன் உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க தொழில்துறையின் நலன்களுக்கும் எதிரானது” என்றும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

Share This