உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு

உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே “உடனடி போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே “பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும். பல உயிர்கள் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன, பல குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் மிகப் பெரியதாகவும், மோசமானதாகவும் மாறும். எனக்கு புடினை நன்கு தெரியும். இது அவர் செயல்பட வேண்டிய நேரம் இதற்காகவே உலகம் காத்திருக்கிறது” என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 400,000 வீரர்களின் உயிர்களை பலிகொண்ட மொஸ்கோவுடனான தனது நாட்டின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆர்வமாக இருப்பதாக ட்ரம் மேலும் கூறினார்.

“ஜெலென்ஸ்கியும், உக்ரைனும் ஒரு ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த விரும்புகிறார்கள். அவர்கள் 400,000 வீரர்களையும் இன்னும் பல பொதுமக்களையும் அபத்தமான முறையில் இழந்துள்ளனர்” என்று எழுதியுள்ளார்.

பாரிஸில் உள்ள நோட்ரே-டேம் கதீட்ரல் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி, ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்பின் அறிக்கை வந்துள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற இரு நாட்டின் தலைவர்கள் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள ஒன்று என்றும் மூவரும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.

இது ட்ரம்ப்புடன் ஜெலென்ஸ்கியின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு என்பதுடன், நவம்பர் ஐந்தாம் திகதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் முதல் சர்வதேச விஜயம் ஆகும்.

 

Share This