திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலையில் புத்தர் சிலை குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு அரசாங்கமே நேரடி பொறுப்பு கூற வேண்டும் என மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர், அரசாங்கத்தை கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, புத்த சாசனத்திற்கு ஏற்படும் சேதம் குறித்து நாங்கள் எச்சரித்தோம்.

அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் இப்போது நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களைப் பற்றி வருத்தப்பட வேண்டும்,” என்று தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அமரபுர மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலம் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விஹாரை 1951 முதல் குறித்த இடத்தில் இருந்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணையின் மூலம் 2014 ஆம் ஆண்டு நில உரிமை விஹாரை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தால் தேரர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பது வருந்தத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This