
ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில்
அவர் இன்று (06) காலை முன்னிலையானார்.
இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதுளை நீதவான் உதித் குணதிலக்க, குறித்த வழக்கை மே மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவிருந்த தினத்தில் பகல் வேளையில் பதுளை நகரில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஊர்வலமாகச் சென்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது கைது செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ, அன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
