
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில் சேவை வழமைக்கு
இயற்கை அனர்த்த நிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரையான ரயில் சேவை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து இன்று அதிகாலை 3.25 க்கு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலுடன் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இன்று முற்பகலில் அனைத்து அலுவலக ரயில்களின் ஓட்டமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக புஜ்ஜோமுவ ரயில் நிலையம் அருகில் அமைந்திருந்த பழைய வடிகால் பாலமொன்று உடைந்தது.
இதன் காரணமாக ரயில் பாதைக்கு அடியில் சுமார் 45 அடி ஆழமான குழியொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் பிரதான பாதை மட்டுமின்றி வடக்கு மற்றும் கிழக்கு ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
தன்னார்வக் குழுக்கள் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் ரயில் பாதையை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவே இன்று காலை அலுவலக ரயில்களை இயக்க முடிந்தது என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
