சூடானில் கிராமமே முழுவதுமாக புதையுண்ட சோகம் – 1000 பேர் உயிரிழப்பு

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.
சூடான் விடுதலை இயக்கம் எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றுள்ளதோடு, பல நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக சூடான் விடுதலை இயக்கம் , ஐ.நா மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளிடம் உடனடி உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி கோரியுள்ளது.
குறித்த கிராமம் தற்போது முழுதும் மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கிராமம் அமைந்துள்ள தார்ஃபூர் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சிவில் போர் காரணமாக பலர் பாதுகாப்பிற்காக இந்த மலைச்சரிவுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும், இங்கு போதிய உணவு, மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது.
இங்கு கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போர், மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பசி, பட்டினி உள்ளிட்ட நெருக்கடி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அனர்த்தமானது, முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.