வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மூவர் மீட்பு – சீனாவில் நடந்த துணிகர சம்பவம்

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள டெங்சியன் கவுண்டியில், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நீரில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடந்த வியத்தகு மீட்புப் பணியில், துணிச்சலான மூன்று பேர் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மூவரை காப்பாற்றியுள்ளனர்.
பெய்த கனமழையால் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக்கொண்டதுடன், காரில் மூவர் சிக்கிக்கொண்டனர்.
இதன்போது அங்கிருந்த மூவர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த மூவரையும் காதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“காருக்குள் ஆட்கள் இருப்பதாக யாரோ சொல்வதைக் கேட்டேன். வெள்ளநீர் வேகமாகவருவதைப் பார்த்ததும், நான் பயந்தேன், ஆனால் நான் ஒரு சுத்தியலைப் பிடித்து கார் கண்ணாடியை உடைத்தேன்.
முதல் நபரை மீட்ட நேரத்தில், வெள்ளநீர் ஏற்கனவே காரின் ஜன்னலின் மேல் விளிம்பை அடைந்துவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் இருவர் தன்னுடன் இணைந்து உதவி செய்தனர். ஆரம்பத்தில், நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆபத்தை உணர்ந்தவுடன், நான் விரைந்து செயற்பட்டேன்.
எங்களின் கூட்டு முயற்சியால், சிக்கிய மூன்று பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.