அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் – அரசாங்கம் கண்டனம்

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன.
சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற இந்த “மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா” பேரணிகளில், வலதுசாரி தீவிரவாத குழுக்களும், நவ-நாஜி பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.
சிட்னி பேரணியில் 8,000 பேர் வரையும் , அடிலெய்டில் 15,000 பேர் வரையும் பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெல்போர்னில் சில பகுதிகளில் மோதல்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள், பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் மோதியதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பேரணிகளில் பவுலின் ஹான்சன், பாப் கட்டர் உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
பேரணிகளில், குடியேற்றம், கலாச்சாரம், வீட்டு வசதி, மருத்துவம், குற்றம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சனைகள் குறித்து கவலை வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், பேரணிகளில் வெறுப்பும் மோதலும் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
உள்துறை அமைச்சர் டோனி பர்க் கூறுகையில், “நம்மைப் பிளக்கும் இயக்கங்களுக்கு அவுஸ்திரேலியாவில் இடமில்லை. நாங்கள் நவீன, ஒற்றுமையுள்ள அவுஸ்திரேலியாவுடன் இருக்கிறோம்” என்றார்.
புலம்பெயர்ந்த சமூகங்களை அச்சுறுத்தும் முயற்சிகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என அமைச்சர் டாக்டர் ஆன் அலி கூறியுள்ளார்
அரசாங்கம், வெறுப்புப் பேரணிகளை எதிர்ப்பதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.