“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி

“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது நகரத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசப்போவதாகவும், நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி கூறினார்.

நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பேசவுள்ள விஷயங்கள் குறித்து சிட்டி ஹால் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தானி, “ இந்த சந்திப்பின்போது நியூயார்க்கின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளேன். எது நடந்தாலும் நான் தயாராக இருப்பேன்.

நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுடைய வாழ்க்கையை மிகவும் மலிவு விலையில் மாற்ற நான் யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதால், எனது குழு இந்த சந்திப்பை விரும்பியது.

ட்ரம்ப்புடன் எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் சிலவற்றை நாம் விட்டுக்கொடுக்க கூடாது. ஒவ்வொரு நியூயார்க்கருக்கும் நமது நகரத்தின் பொருளாதார நெருக்கடிகளைப் போக்க அனைத்து வழிகளையும், அனைத்து சந்திப்புகளையும் தொடர வேண்டும் என்று நான் நம்புகிறேன். நியூயார்க்கர்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை ட்ரம்பிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏதேனும் ஒரு நடவடிக்கை நியூயார்க்கர்களை காயப்படுத்தினால், அதை முதலில் அவரிடம் கூறுவேன்.

நியூயார்க் உள்ளிட்ட ஐந்து பெருநகரங்களில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மக்கள் இந்த நகரத்தில் வாழ முடியாதபடி செய்யும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு தீர்க்கும் ஒரு தலைவரை அவர்கள் விரும்பினர். அதன்படியே அவர்கள் என்னை தேர்ந்தெடுத்தனர். நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

Share This