இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை

‘தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை குறைந்திருக்கின்றது. பொருளாதார வளர்ச்சி வீதமும் காணப்படுகின்றது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்திற்கு கிடைக்ககூடிய ஓதுக்கீடும் அதிகரித்துள்ளது.
மலையகத் தொழிலார்கள் நாட்டுக்காக உழைத்தாலும் கூட அதிக சம்பளமாக 1350 ரூபாவாக காணப்பட்டது. இந்தமுறை இந்த வரவு செலவுத் திட்டம் ஊடாக 400 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரச செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்தகால அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சாதகமானதாகவுள்ளது என்பதை ஒழிவுமறைவின்றி சொல்லவேண்டிய கடப்பாடு உள்ளது.
இதுவொரு பொதுவான பார்வை நாட்டுப்பார்வை. வடகிழக்கினைப் பொறுத்தவரையில் யுத்தினால் இனவழிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றவர்கள், தமது சொந்தக் காணிகளை இழந்து நிற்கின்றவர்கள் என்று பார்க்கும்போது தமிழ் மக்கள் இந்த நாட்டின் பொதுவான பார்வையினை விட விசேடமான பார்வையினை எதிர்பார்க்கின்றனர்’ என்றார்.
