மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் – நா.வேதநாயகன்

“மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர்.”
– இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்தார். அத்துடன் சந்தையினுள் மரக்கன்றும் நடுகை செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தினுள், திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில்,
முன்னைய காலங்களில் எமது மாகாணமே இலங்கையில் தூய்மையான மாகாணமாக இருந்தது. ஆனால் இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. எப்போது ‘சொப்பிங் பாக்’, ‘பிளாஸ்ரிக் போத்தல்’ என்பன அறிமுகத் தொடங்கியதோ அன்றே எமது சுற்றாடலும் மாசடையத் தொடங்கிவிட்டது.
எங்கள் இடத்தை அழகாக – தூய்மையாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எமது சூழல் அழகாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், வீதியில் குப்பைகளைப் போட்டிருக்கமாட்டோம். இளமையிலேயே எங்கள் பிள்ளைகளுக்கு சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பதை பழக்கவேண்டும். இன்று இங்குள்ள மாணவர்கள், எதிர்காலத்தில் பெரியவர்களாகும்போது சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பவர்களாக மாறவேண்டும்.
உங்களுக்கு நல்லதொரு பிரதேச செயலராக விஜயகுமார் கிடைத்திருக்கின்றார். அவர் இந்தப் பகுதியில் சிறப்பான மாற்றங்களைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது, என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.யசிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலர் ச.கிருசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட திண்மக் கழிவகற்றலுக்காக அட்டை மற்றும் துண்டுபிரசுரம் என்பன ஆளுநரால் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.