ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள் – வேதநாயகன்

ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள் – வேதநாயகன்

‘‘ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள். அந்த மரங்களை வளர்ப்பதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப்பற்றிச் சிந்திக்காமல் இவ்வாறு அசிரத்தையாகச் செயற்படுகின்றனர்.‘‘ இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் மின்வடங்களுக்கு பாதிப்பு எனத் தெரிவித்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மிகமோசமான முறையில் வெட்டப்படுகின்றமை தொடர்பிலும் அந்தக் குப்பைகள் வீதிகளில் வீசப்படுகின்றமை தொடர்பாகவும் ஆளுநருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. அத்துடன் ரயில்வே திணைக்களத்தால் தென்மராட்சி பிரதேசத்தில் நடுகை செய்யப்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டமை தொடர்பாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய பிரதிப்பொது முகாமையாளர் எஸ்.பிரபாகரன், தடையற்ற மின்சாரத்தை வழங்கும்நோக்கில் மின்வடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதும் மரங்கள் அல்லது மரக்கிளைகளே வெட்டப்படுகின்றன எனக் குறிப்பிட்டார். இதன்போது ஒப்பந்தகாரர்கள் வெட்டுகின்ற மரங்களை வீதிகளிலேயே போட்டுவிட்டுச் செல்கின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்ற என்பதை ஏற்றுக்கொண்டார். அத்துடன் இதனை முகாமை செய்வதிலும் சில இடர்பாடுகள் இருக்கின்றன எனவும் ஒப்புக்கொண்டார்.

மாரி காலத்தை அண்மித்தே மக்கள் மரங்களை வெட்டுவது வழக்கம் எனவும், ஆனால் ஒப்பந்தகாரர்கள் கோடை காலத்திலும் மரங்களை வெட்டுகின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதிப்பொது முகாமையாளர், வருடத்தின் 4 தடவைகள் இந்த மரங்கள் அல்லது கிளைகளை வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மின்வடங்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்தார். தற்போது மின்வடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் மரங்களை நடுகை செய்வதற்கு அனுமதிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த ஒப்பந்தப் பணிகளுக்குரியவர்கள் இங்கு இல்லை என பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார். எனவே மரங்களை அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெட்டுவதற்குரிய ஆளணியினரை இங்கு உருவாக்கி எதிர்காலத்தில் அவர்கள் ஊடாக அதனைச் செய்வதற்கான யோசனையை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் முன்வைத்தார்.

இதேவேளை, ரயில்வே திணைக்களம் தமது ரயில் பாதைகளிலிருந்து 30 அடிக்குள் மரங்கள் நடுகை செய்யக்கூடாது என்ற ஏற்பாடுகள் உள்ளது எனச் சுட்டிக்காட்டினர். தென்மராட்சியில் தமது அனுமதி பெறாமலே நடுகை செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டனர். தற்போது அனுமதி பெறாமல் யாராவது நடுகை செய்தால் அதனை பக்குவமாக அகற்றி வேறு இடங்களில் நடுகை செய்ய வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரயில் பாதைகளுக்குள் நடுகை செய்யக் கூடாது என்ற விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மேலும், வடக்கு மாகாணத்தில் மரம் நடுகையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்கவேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர், அதனை தன்னார்வமாக முன்னெடுக்கும் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு செயற்படுத்துமாறு பணித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் தன்னார்வமாக மரம் நடுகையை முன்னெடுக்கும், கிறீன் லேயர் அமைப்பின் நிறுவுனர் பா.சசிக்குமார், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This