முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் செய்யப்படாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது
செபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.
இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.
அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். என்றாலும், முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் கட்டணக் குறைப்புக்கு இடமில்லை என அறிவித்துள்ளன.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் (AITWDU) தெரிவித்துள்ளது.
ஏனெனில் இது தொடர்பிலான முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் சமீபத்தில் மேற்கு மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, அவர்கள் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நிலையான கட்டணங்களை நிர்ணயித்தனர்.
முன்னதாக, முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபா மற்றும் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 90 ரூபா என கட்டணத்தை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஒருபோதும் அது செயல்படுத்தப்படவில்லை.
“எனவே, முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைக்க நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது, அது மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பொறுப்பாகும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.