இன்று முதல் மின்வெட்டு இருக்காது – அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு இருக்காது என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தன.
இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேற்றும் ஒரு மணி நேர மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை நேற்று (13) காலை அறிவித்தது.
இதற்கிடையில், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களை மீட்டெடுத்து, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.