கூட்டத்தில் திடீர் சலசலப்பு… மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் – பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சீமான் மேடையில் பேசத் தொடங்கியபோது, செய்தியாளர்களுக்கும் – பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதனை பாதுகாவலர்கள் மறுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, ஆவேசமாக மேடையில் இருந்து இறங்கிய சீமான், வாக்குவாதம் ஏற்பட்ட பகுதிக்குச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
அவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதன்பின், கூட்டத்தில் பேசிய சீமான் “சலசலப்புக்கும் சத்தத்திற்கும் அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்” என்றார்.
இதே விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை சீமான் முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.