தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

தனிப்பட்ட இரு சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ள முடியாது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ நீதிமன்றத்தில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பில் நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைய தினங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அரசாங்கம் தீவிர முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
நேற்று துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது. அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் என்பவராவார். விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசிய பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லை. இவை அந்தந்த இடங்களில் இடம்பெறும் பாதாள குழு செயற்பாடுகள்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறுபவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. கொலைகள் இடம்பெற்றன. நேற்று (19) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேறு பல கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தனிப்பட்ட ஓரிரு சம்பவங்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் பாடுபடுகிறோம்.
இவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனக் கூறினார்.