தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – கண்டுகொள்ளுமா அரசாங்கம்?

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – கண்டுகொள்ளுமா அரசாங்கம்?

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக அரசாங்கம் சம்பள உயர்வை வழங்கியுள்ள நிலையில் தனியார் துறைக்கும் சம்பள உயர்வுகள் இடம்பெற வேண்டுமென முன்மொழிந்தது.

தற்போது 21ஆயிரமாக உள்ள ஆக குறைந்த அடிப்படைச் சம்பளத்தை 27ஆயிரம் ரூபாவாகவும் அடுத்தாண்டு முதல் 30ஆயிரம் ரூபாவாகவும் உயர்த்த வேண்டுமென அரசாங்கம் முன்மொழிந்திருந்துள்ளது.

அரசாங்கம் 21ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளத்தை கடந்த காலத்தில் நிர்ணயித்திருந்தாலும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் 21ஆயிரம் ரூபா என்ற அடிப்படை சம்பளம் வழங்கப்படுவதில்லை.

வரவு – செலவுத் திட்டத்தை முன்மொழியும் போது வெறும் பேச்சளவிலேயே தனியார் துறைக்கான சம்பள உயர்வு தொடர்பிலான முன்மொழிவுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. குறித்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் அல்லது நடைமுறைக்கு சாத்தியமான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் முன்மொழியவில்லை.

தற்போதைய முன்மொழிவும் அவ்வாறுதான் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அரச ஊழியர்களை போன்று தமக்கும் நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கடுமையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென தனியார் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்த முடியாதென இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவித்துள்ளது.

”வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சிக்கண்டுள்ள தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை.

நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியும் சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும்போது ​​ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது.

50 – 60 மணிநேரத்திற்கு மேலதிக வேலை செய்கிறார்கள். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம்.  மேலதிக நேர பணிக்கு மாத்திரம் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம். அதனுடன் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF, EPF) மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, ​​சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது. அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, ​​தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.” என இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம்  கூறியுள்ளது.

இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் போல் பல்வேறு தனியார் வர்த்தக சங்கங்களும் சம்பள உயர்வுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை. இதனால் அரசாங்கத்தின் முன்மொழிவை தனியார் துறையினர் கண்டுகொள்ள மாட்டார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share This