நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் படி, 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிகளில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 25,000 ரூபா பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம்.

இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )