பால் சோறு சமைக்க அரிசி இல்லை – புத்தாண்டை வரவேற்க முடியாத நிலையில் மக்கள்
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் உள்ளூர் அரிசி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக பால் சோறு தயாரிக்கும் வெள்ளை அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் இம்முறை புத்தாண்டை வரவேற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரிசிக்கு நாட்டில் ஏற்பட்ட கடும் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து 70ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்தது. இறக்குமதி செய்யும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையும் விதிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மக்கள் அதிகம் நுகரும் நாட்டரிசியை 225 ரூபா என்ற சில்லறை விலைக்கு மொத்த வியாபாரிகள் வழங்க வேண்டும் என்றும் நாட்டரிசியை 230 ரூபா என்ற அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.
ஆனால், 225 ரூபா என்ற சில்லறை விலையில் அரிசியை பெற்று 230 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியாதென வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் பெரும்பாலான வர்த்தகர்கள் அரிசியை கொள்வனவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.