அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும், சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது இது புதியதொன்று அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (07.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
உண்மையிலேயே 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயப்பட்டிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
இருந்தாலும் குறித்த விவகாரம் தற்போதும் நீதிமன்றில் இருக்கின்ற நிலையில் அதுதொடர்பாக நாம் தற்போதைக்கு எந்தவிதமான கருத்தினையும் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம்மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையிலே தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான சேறடிப்புக்கள் எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய விடயங்கள் அல்ல. கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களில் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.