”தீப்பந்தம்” ஈழத்தமிழ் திரைப்படம் – சமூக வாழ்வியல் வெளிப்பாடு

*ஈரான் திரைப்படங்கள் போன்று சமூக வாழ்வியல் வெளிப்பாடு
*இந்திய சினிமாக்களை விட ஈழத் தமிழ் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
*இளைஞர்கள் அறிய வேண்டிய தமிழர் மரபின் பின்னணிகள்
——- ——
அ.நிக்ஸன்
சினிமா என்பது ஒரு கலை. திரைப்படங்களையும், நிகழ்படங்களையும் குறித்து நிற்பது சினிமா. “தகவல் பரிமாற்றம்” ”ஆவணத் தயாரிப்பு” என்றும் பொருள் கோடல் செய்ய முடியும்
சினிமா ஒரு பொழுதுபோக்கு என்றுதான் பலரும் கூறுவர்.
ஆனால் சினிமா பொழுதுபோக்கு என்பதற்கும் அப்பால், சமூக மாற்றம் – ஒரு இனத்தின் அரசியல் விடுதலை – அந்த இனத்தின் வாழ்வியல் தன்மை அடங்கலாக, சமூக சமய அரசியல் வரலாறு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ஊடகம் என்றே பொருள் கொள்ள முடியும்.
அரசு அற்ற ஒரு இனத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற ”சதிக் கோட்பாடு” என்ற தீய நெறிகள், அந்த தீய நெறிகளை வடிமைக்கும் நுட்பமான கையூட்டல்கள் பற்றியெல்லாம் யதார்த்தமாக சொல்லக் கூடியது சினிமாக்கலை.
ஈரானிய திரைப்படங்களில் குழந்தை உளவியல், பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகள் உண்டு என்பதற்கு அப்பால், உலக அரசியலை பல வழிகளிலும் அவை பிரதிபலிக்கின்றன.
அயல்நாட்டு உறவுகள், பிராந்திய அரசியல் பற்றிய பார்வைகளையும் ஈரான் திரைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா – மேற்கத்திய நாடுகளுடனான உறவுகள், பிராந்திய மோதல்கள் – அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விவகாரங்கள் ஈரான் திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன.
பாலின சமத்துவம், மத சுதந்திரம், மற்றும் குடிமக்களின் உரிமைகள் போன்ற சமூக பிரச்சனைகளையும் ஈரான் படங்கள் மையப்படுத்துகிறது.
இந்த இடத்தில் ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ”தீப்பந்தம்” என்ற ஈழ சினிமா, தனித்துவமான பாணியிலும், கதை சொல்லும் முறையாலும் உலக சினிமா ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை உள்ளது என்பேன்.
அதாவது ஈரான் சினிமா போன்று சமூகவியல் – அரசியல் பார்வைகள் இப் படத்தின் மைய உள்ளடக்கமாகும்.
ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் போராட்டம் பற்றிய பார்வையும், அடுத்த இளம் தலைமுறைக்கு கடத்தும் வரலாற்று ஆவணமாகவும் தமிழர் வாழ்வியல் யதார்த்தங்களை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது என்பேன்.
திரைப்படத்தை மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிட்ட பின்னர், அப் படத்தின் கதை அம்சம் – ஈழத்தமிழர்களுக்கு புகட்டிய பாடங்கள் – பட்டறிவுகள் நடிப்புத் தன்மைகள் அடங்கலாக, அதன் யதார்த்தமான உள்ளடக்கம் பற்றிய விமர்சனம் ஒன்றை எழுதவுள்ளேன்.
ஆகவே, இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் நாட்டு சினிமாக்களையும் அதன் நடிகர்களையும் வரவழைத்து அழகு பார்ப்பதை விடவும், ஈழத்துக் கலைஞர்கள் – ஈழத்துப் படைப்பாளிகள் – ஈழத்துப் பாடகர்களை முதன்மைப்படுத்தி ஈழத் தமிழ்ச் சமூகத்தின் கலை பண்பாட்டுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தலைமுறையினர் – தமிழ் நாட்டு திரைப்படக் கலைஞர்கள் – என பலவகைப்பட்ட தரப்பினரும் ”தீப்பந்தம்” திரைப்படத்தை பார்வையிட வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட உலக சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கின்ற வசதி வாய்ப்புகள் ஈழ சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை.
ஆனாலும் கதை அம்சம் – சமூக உணர்வு – சரியான முறையில் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் முறைமைகளில் உள்ள நுட்பம் மிகச் சிறப்பு-
”தீப்பந்தம்” ஈழத்தமிழர் மரபையும் அதன் அரசியல் பண்பாட்டு அசைவையும் முதன்மைப் படுத்துகின்றது.
திரைப்படத்தை தயாரித்த சிவராஜா – மதீசன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகள்.