
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும் கடந்த 1965-ம் ஆண்டில் ‘மினிட்மேன் II’ ஏவுகணையும் அமெரிக்க விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
கடந்த 1970-ம் ஆண்டில் ‘மினிட்மேன் III’ ஏவுகணை விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவுகணைகள் அமெரிக்காவின் மோன்டானா, நார்த் டகோடா, வயோமிங் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்க முடியும்
‘மினிட்மேன் III’ ஏவுகணையின் திறன் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அதிவேகத்தில், அதிக தொலைவு சீறிப் பாயும் ‘மினிட்மேன் III’ ஏவுகணையின் சோதனை மார்ச் 3-ம் திகதி இரவு 11.01 மணிக்கு (பசிபிக் நேரம்) நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் வாண்டன்பெர்க் விண்வெளி படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட ஏவுகணை, மார்ஷல் தீவுகளுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்டிருந்த 2 இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது. ‘மினிட்மேன் III’ ஏவுகணை மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த ஏவுகணை முதலில் விண்வெளியின் வளிமண்டலத்தை தாண்டிச் செல்லும். பின்னர் விண்வெளியில் இருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து தரையில் உள்ள இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். 36,000 கிலோ எடை, 59.5 அடி நீளம், 5.5 அடி விட்டம் கொண்ட ஒரு ஏவுகணையில் 3 அணு குண்டுகள் வரை சுமந்து செல்ல முடியும்.
இந்த ஏவுகணை மணிக்கு 24,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். சுமார் 13,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். ‘மினிட்மேன் III’ ஏவுகணை மூலம் உலகின் எந்த பகுதியையும் 30 நிமிடங்களில் தாக்கி அழிக்க முடியும். இவ்வாறு அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போரில் ஈரான் ராணுவத்துக்கு ரஷ்யாவும் சீனாவும் மறைமுகமாக உதவி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஈரான், சீனா, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டூம்ஸ்டே (அழிவு நாள்) ஏவுகணை என்றழைக்கப்படும் ‘மினிட்மேன் III’ ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
