சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று  26.12.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவர் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து இவ்வாறு கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற தமிழ் செல்வன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியமை மற்றும் தகவல் அறியும் சட்டமூலத்தில் தகவல்களை பெற்று பல ஊழல்களை வெளிப்படுத்த முயன்றமையின் காரணமாக தாம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளப்பட்டுள்ளதாக தமிழ் செல்வன் தெரிவித்தார்.

தமிழ் செல்வன் மீதான தாக்குதல் முயற்சியை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தம்மீது தாக்குதல் நடத்தப்பட்ட வானை செலுத்திவந்த சாரதியை அடையாளம் காட்ட முடியும் என தமிழ் செல்வன் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், புலனாய்வு பிரிவினர் உரிய விசாரணையை மேற்கொண்டு அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணியை முன்னெடுக்கும் சூழ்நிலையை வடமாகாணத்தின் மாவட்டங்களில் ஏற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் பணியாற்ற வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This