
இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன
இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை எவ்வாறு மேம்படுத்தப்படும் என எமது விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்றொழில் விடயத்தில் நாம் இன்னமும் பழமையான நிலையிலேயே உள்ளோம் என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகின்றது. நவீன படகுகள் பற்றியும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மீன்பிடித்துறை வலுவிழந்து வரும் நிலையும் காணப்படுகின்றது.
இந்நிலைமையில் இருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. 2025 வரவு- செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்கு கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
அதேபோல மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்தமுறையைவிட இம்முறை எல்லா விடயங்களுக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதற்குரிய ஒதுக்கீடும் உள்ளது.
மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலறிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையை சூழ கடல் வளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ரின் மீன் இறக்குமதி செய்யும்நிலை காணப்பட்டது. இதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த காலங்களில் இவர்களுக்கு உப்பு பிரச்சினை இருந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கடற்றொழில் அமைச்சால் இலங்கையில் பிரமாண்ட கண்காட்சி கடந்த வாரம் நடத்தப்பட்டது. எமது நாட்டின் மகத்துவம் இதன்மூலம் எடுத்துரைக்கப்பட்டது. சர்வதேசத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது.
மீனவர்களின் பிரச்சினைகள் எமக்கு தெரியும். அவற்றை தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளை நாம் மேற்கொள்வோம். மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று நாம் தீர்வுகளை வழங்கி வருகின்றோம் என்றார்.
