மருந்துகளின் விலையை குறைப்பதில் சிக்கல்
மருந்துகளின் விலை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்ற போதிலும் மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக விலையை குறைக்க முடியாதுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், மருந்து விலை குறைப்பு முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்து மீண்டு தற்போது ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது.
விரைவில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இந்த அதிகாரசபை மாறும் சாத்தியம் காணப்படுகிறது.
மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதே தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதன்மை பொறுப்பும் நோக்கமும் ஆகும்.அண்மைக்காலமாக மருந்துகள் தொடர்பான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது” என்றார்.