அரை கட்டணத்தை செலுத்தியா ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றார்?

அரை கட்டணத்தை செலுத்தியா ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்றார்?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார்.

”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 ரூபாதான் செலவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 11 பேருடன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு 1.8 மில்லியன்தான் செலவு என்றால், எதிர்க்கட்சியின் உள்ள அனைவரும் குறித்த மூன்று நாடுகளுக்குச் சென்றுவருவோம். இது மிகவும் சுவராஷ்யமாக உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 3572 மில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு முதல் முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவும் தமது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டிருந்தாக பிரதமர் கூறியிருந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே சாமர சம்பத், இவ்வாறு விமர்சனம் முன்வைத்துள்ளார்.

Share This